“ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் டுவிட்டர் பதிவால் பரபரப்பு

‘ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தியின் டுவிட்டர் பதிவை படத்தில் காணலாம்; சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தியின் டுவிட்டர் பதிவை படத்தில் காணலாம்; சத்தியமூர்த்தி
Published on

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு உறுதிபட தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என அவருடைய ரசிகர்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கிராமங்கள் முதல் மாநகராட்சி வரை அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி வந்தனர்.

இந்த நிலையில் ரஜினி அரசியல் குறித்து அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு(2021) வர உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

டுவிட்டரில் பதிவு

இந்த நிலையில் ரஜினியும் மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். மேலும் அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார். இதனால் அவர் தனது அறிவிப்பை ஓரிருநாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று டுவிட்டரில் பதிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தற்கொலை செய்து கொள்வேன்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை பார்த்தார். தற்போது விவசாயம் செய்து வருகிறார். மேலும் 1995-ம் ஆண்டு முதல் ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருந்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு பரணிதரன், இனியவன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியமூர்த்தி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். மக்கள் தலைவரின் காவலன் என்ற பெயரில் வெளியிட்ட பதிவில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்ய உள்ளேன் என்று கூறி இருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக நீக்கம்

இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் அவரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரஜினிகணேசனும், சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு இது போன்று செய்யக்கூடாது. அந்த பதிவை உடனடியாக நீக்கி விடு என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சத்தியமூர்த்தி மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை போட்டார். அதில் அனைவரும் மன்னிக்கவும். மன உளைச்சல் காரணமாக இந்த பதிவினை போட்டு விட்டேன். மாவட்ட செயலாளர், என்னிடம் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். களப்பணி செய்தவருக்குத்தான் அந்த வலி தெரியும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்தை தருவார்

இது குறித்து சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, தலைவர் மீது உள்ள அன்பாலும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த பதிவினை போட்டேன். கஜா புயல், கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்து ஏராளமான நிவாரணங்களை வழங்கியதோடு, பல்வேறு மாவட்டங்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணங்களையும் மக்களுக்கு வழங்கினோம். அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி உள்ளோம். ரஜினியால் மட்டும் தான் மாற்றத்தை கொடுக்க முடியும்.அவர் அரசியலுக்கு வருவாரோ? மாட்டாரோ? என்ற நிலையில் தான் அந்த பதிவினை போட்டேன். மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் என்னை தொடர்பு கொண்டு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என கூறியதையடுத்து அந்த பதிவினை நீக்கி விட்டேன்என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com