காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட வேண்டும் என்று, கதிராமங்கலத்தில் வைகோ கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட வேண்டும்
Published on

திருவாலங்காடு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கதிராமங்கலத்துக்கு வந்தார். அவருக்கு ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கதிராமங்கலம் கடைவீதியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி படுகையில் எந்த இடத்திலும் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க கோரினோம். ஆனால் நாகை, திருவாரூர் பகுதியை மத்திய அரசு பெட்ரோலிய ரசாயன பொருட்களின் முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. இது மிகவும் அநீதியானது.

கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் தரமாட்டார்கள். நம்மை ஏமாற்றுகின்றனர். இந்த சூழ்நிலையில் காவிரி படுகையில் விவசாயத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர். தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளனர். பின்னர் இங்கிருந்து மீத்தேன், ஷேல்கியாஸ், ஹைட்ரோ கார்பன் எடுத்து சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர். இதை எதிர்த்து தான் வழக்கு போட்டுள்ளேன். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து அமைதியாக தான் போராடுகிறோம். கதிராமங்கலம் மக்களின் போராட்டத்தை உலகமே உற்று நோக்குகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் டெல்டா பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் நமது பிரச்சனையை அறிய முன்வருவார்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

அப்போது கதிராமங்கலம் ஊராட்சி அலுவலக பகுதியிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் கடைவீதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தது. இதைக்கண்ட வைகோ ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் புறப்படுகிறேன் எனக்கூறி பேச்சை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com