காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும், தா.பாண்டியன் பேச்சு

உச்சநீதிமன்ற காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வில்லியனூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும், தா.பாண்டியன் பேச்சு
Published on

வில்லியனூர்,

வில்லியனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கடவுளை அவமதித்து பேசியதாக எழுந்த பிரச்சினையால் பா.ஜ.க., திராவிடர் கழகத்தினர் மோதிக் கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 20 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோதலில் காவல் துறையின் செயல்பாட்டை கண்டித்தும், கருத்து சுதந்திரத்தில் பா.ஜ.க. தலையிடுவதை கண்டித்தும் திராவிடர் கழகம், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (எம்.எல்.), விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் வில்லியனூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மூலம் ரத யாத்திரை என்ற பெயரில் வகுப்புவாத கொள்கைகளை அரசியல் பின்புலத்தோடு அதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற காலக்கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். புதுவையில் கவர்னரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு நாராயணசாமி வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆட்சி அதிகாரத்தில் அந்த அளவுக்கு கவர்னரின் தலையீடு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் விசுவநாதன், திராவிடர் கழக நிர்வாகி சிவ.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக் குமார், இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்க நிர்வாகி அபிஷேகம் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க.வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com