உரத்தட்டுப்பாட்டை சரிசெய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை சரி செய்யாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உரத்தட்டுப்பாட்டை சரிசெய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Published on

ராமநாதபுரம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் பருவமழை சமயங்களில் விவசாய பணிகளுக்கு 10,000 மெட்ரிக் டன் உரங்கள் தேவைப்படுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 4,000 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் மாவட்டத்தில் தற்போது 100 மெட்ரிக் டன் அளவிலான உரங்கள் மட்டுமே உள்ளது. மாவட்டத்திலுள்ள 130 வேளாண் கூட்டுறவு நாணய சங்கங்களில் உரம் இருப்பு இல்லை. 50 கிலோ எடையுள்ள உரமூடை அரசு நிர்ணயித்த விலை ரூ.267 மட்டுமே. ஆனால், தனியார் உரக்கடைக்காரர்கள் ரூ.650 வரை உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

உர விலைகளை கண்காணிக்க குழு அமைப்பு என்பது கண்துடைப்பு வேலை. மாவட்டத்தில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் இல்லை. இன்னும் 10 நாட்களில் உரங்கள் விவசாய பணிகளுக்கு கிடைக்காவிட்டால் அதன் பின்னர் கிடைத்தும் பயனில்லை.

எனவே விரவில் உரத்தட்டுபாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com