காஞ்சீபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் வாரம் தோறும் பரிசு நகராட்சி ஆணையர் தகவல்

காஞ்சீபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் வாரம் தோறும் பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் வாரம் தோறும் பரிசு நகராட்சி ஆணையர் தகவல்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நிருபர்களிடம் பேசும்போது கூறியிருப்பதாவது:-

திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்தவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்போருக்கு வாரம் தோறும் பரிசு வழங்கப்படவுள்ளது.

நகராட்சியில் 51 வார்டுகளை உள்ளடக்கிய 6 கோட்டங்களிலும் ஒரு கோட்டத்துக்கு இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மொத்தம் 12 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த பரிசானது ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நிமந்தகார ஒற்றைவாடைத்தெரு, ஏகாம்பரநாதர் நகர், மாதனம் பிள்ளை தெரு, புதுப்பாளையம் தெரு உள்ளிட்ட 12 இடங்களில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு 12 பேருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து கொடுக்குமாறும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மக்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் வண்ண கோலங்கள் வரைந்து கண்ட இடங்களில் குப்பைகளை போடாமல் இருக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். காஞ்சீபுரம் நகரில் குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை தொட்டிகள் இல்லாத நகராக மாற்றப்படும். விரைவில் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரிக்கும் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராமகிருஷ்ணன், ரமேஷ்குமார், இக்பால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com