மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் - கண்ணன் உறுதி

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்போம் என்று கட்சியின் தலைவர் கண்ணன் உறுதி அளித்துள்ளார்.
மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் - கண்ணன் உறுதி
Published on

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிச்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கண்ணன் நேற்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்காக அவர் கவிக்குயில் நகரில் உள்ள ஸ்ரீபுத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்கள் மத்தியில் கண்ணன் பேசியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. வளர்ச்சி திட்டமும் நடைபெறப்போவதில்லை.

இதற்கு முன்பு இருந்த எம்.எல்.ஏ. இந்த பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. நான் எம்.பி.யாக இருந்த போது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். காங்கிரஸ். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் உங்களிடம் வாக்கு கேட்க மட்டும் தான் வருவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் இந்த பகுதிக்கே வரமாட்டார்கள்.

எனது கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் தொகுதிக்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளையும் பெற்று தருவோம்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அவரது தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மரியாதை வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த கட்சியில் இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுபவர் ஏற்கனவே நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது இடைத்தேர்தலில் ஏன் அவரை போட்டியிட வைக்கின்றனர் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் வேறு வேட்பாளர்களே இல்லையா? இந்த தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிச்செல்வத்திற்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com