உரிமைக்கு பங்கம் வந்தால் எந்த முடிவும் எடுப்பேன் - சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை

எனது உரிமைக்கு பங்கம் வந்தால் எந்த முடிவும் எடுப்பேன் என்று சிவா எம்.எல்.ஏ. சட்டசபையில் எச்சரிக்கை விடுத்தார்.
உரிமைக்கு பங்கம் வந்தால் எந்த முடிவும் எடுப்பேன் - சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

சிவா:- புதுவையில் தொடர்ந்து குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு கடை என்றால் அதற்கு நகராட்சி வரி, குப்பை வரி, கழிவுநீர் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்படுகிறது. வரிகள் என்று கூறி மக்களை கசக்கிப் பிழிகிறீர்கள். இவ்வளவும் பெற்றுக்கொண்டு நகரும் சுத்தமாக இல்லை. நகராட்சி என்னதான் செய்கிறது. நகராட்சி வருவாய் பிரிவு சார்பில் வாகனங்களை நிறுத்த எங்கெங்கோ டெண்டர் வைக்கிறார்கள்.

நகராட்சியின் செயல்பாடு தான்தோன்றித்தனமாக போகிறது. நாங்கள் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை. எனது உரிமைக்கு பங்கம் வந்தால் எந்த முடிவும் எடுப்பேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்போல் என்னை நினைக்க வேண்டாம். நான் ரோட்டில் இறங்கி பிரச்சினை செய்தால் தாங்கமாட்டீர்கள்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- 1000 சதுர அடிக்கு மேல் வீடு வைத்திருப்பவர்களுக்குத்தான் குப்பை வரி போடுகிறோம். அதுவும் ரூ.100 தான். மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் குப்பை அள்ள மாதத்துக்கு ரூ.2 கோடி கொடுக்கிறோம்.

சிவா:- நகராட்சியில் வருவாய் பிரிவுக்கு அதற்கு உரிய அதிகாரியை போடுங்கள். உங்களுக்கு வேண்டியதை செய்ய தேவையானவர்களை போடாதீர்கள்.

அன்பழகன்:- இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் குப்பைக்கு வரிபோட்டு உள்ளர்கள்.

நாராயணசாமி:- தமிழ்நாட்டிலும் குப்பை வரி உள்ளது.

அமைச்சர் நமச்சிவாயம்:- குப்பை வரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com