

சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் குடிநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பட்டவர்த்தி வரை பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போராட்டம்
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் சாலையோரம் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. மேலும், குடிநீர் தேங்கி நிற்பதால் சாலை சேதமடைகின்றன. இதனை சரி செய்யக்கோரி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை தெரிவித்தும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களும், வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வரும் பக்தர்களும், இந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். வறட்சியால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இதுபோன்ற சூழ்நிலையில் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் அடிக்கடி பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது வேதனையாக உள்ளது. எனவே, மேற்கண்ட இடத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யாவிட்டால் சீர்காழியில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து வர்த்தகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும், இதுபோன்று அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.