

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி நேற்று முன்தினம் நடைபயிற்சி சென்றபோது 3 மர்ம வாலிபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தவமுனியசாமியை நேற்று காலை துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி சமூக விரோதிகளால் அரிவாளால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஏற்கனவே, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்குமாறு எங்களது கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அமைச்சர் மணிகண்டனின் தலையீடு உள்ளது. எனவே, அவர்மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒருவாரத்திற்குள் குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமநாதபுரத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
அமைச்சர் மணிகண்டன் காட்டுமிராண்டித்தனமாக மேடையில் பேசி வருகிறார். இந்த பிரச்சினையை இப்படியே விடமுடியாது. காவல்துறை அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வெகு விரைவில் முடிவுக்குவரும். அப்போது அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் பதில்சொல்ல வேண்டிய நிலை வரும். எனவே, போலீசார் உடனடியாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
கடந்த 1989-ல் இதுபோன்று நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் கடந்த 1991-ல் அம்மா ஆட்சியில் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மிரட்டுவதற்காக இதனை கூறவில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகி கடும் நடவடிக்கை எடுக்க வைப்போம்.
இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நற்சான்று வழங்கி உள்ளார். கவர்னருக்கு யார் நற்சான்று வழங்குவது. அவருடைய நடவடிக்கையே தற்போது கேள்விக்குறியாகி விட்டதே. திவாகரன் எனது தாய்மாமா. அவர்மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன். கடந்த 2002-ல் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சமீபத்தில் டி.வி.யில் பார்க்கும்போது அவர் மிகவும் ஆவேசமாக என்னைபற்றி பேட்டி கொடுத்தார். இவ்வாறு பதற்றம் அடைவது இருதய நோயாளியான அவரின் உடல்நலத்திற்கு நல்லதல்ல. கட்சியை பொறுத்தவரை தொண்டர்களை பாதுகாப்பதுதான் எனது முதல்கட்ட வேலை. உறவினர்கள் என்பது வேறு. கட்சி என்பது வேறு. கட்சியை பொறுத்தவரை கட்சி நிர்வாகிகளை தவிர தனிமனிதர்களின் ஆசாபாசமோ, தலையீடோ ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் ஒரு அரசு இருப்பதாகவே தெரியவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தீர்ப்பு வந்தால் இந்த ஆட்சி கவிழ்வது நிச்சயம். குட்கா வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டாலும் அதற்கான ஆதாரங்களை அழித்துவிட்டதால் பெரிதாக பயன் ஒன்றும் ஏற்படபோவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், முன்னாள் வாரிய தலைவர் ஜி.முனியசாமி, மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதாசசிக்குமார், பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் முத்தீஸ்வரன், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், திருப்புல்லாணி முத்துசெல்வம், நகர் செயலாளர்கள் ராமநாதபுரம் ரஞ்சித்குமார், கீழக்கரை சுரேஷ், மண்டபம் களஞ்சியராஜா, திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் சங்கர்ஜெயச்சந்திரன், மாவட்ட பேரவை துணை செயலாளர் அடைக்கலம், பாரதிநகர் பேரவை செயலாளர் முத்து, நகர் நிர்வாகி செல்வக்குமார், வக்கீல் பிரிவு துணை செயலாளர் ஸ்ரீகாந்த், ஜெயலலிதா பேரவை முரளி, உடைச்சியார் வலசை செயலாளர் கார்த்திக், மாவட்ட மீனவரணி பொறுப்பாளர் மண்டபம் முரளிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.