ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலியை வழங்காவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டம்

ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலியை வழங்காவிட்டால் வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்படும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலியை வழங்காவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டம்
Published on

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் அருகே உள்ள கோம்புக்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் பூபதி உள்பட கிளைச்சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை 4 ஆண்டுகளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கி வருகின்றனர். இதனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கூலியை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்கள் நலன் கருதி ஒப்பந்தகூலியை வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்கட்டணம் உயரும் போதெல்லாம் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு பவர்டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் விசைத்தறிகளுக்கு 50 சதவீதம் மானியம் அளித்துள்ளது.

இதில் விசைத்தறியாளர்கள் முழுமையாக பயன்பெற மாநில அரசு நெட்மீட்டர் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து, போதிய நிதி உதவி செய்ய வேண்டும்.

விசைத்தறித்தொழில் நலிவடைந்துள்ளதால் கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்ட கலெக்டர்களிடமும் 10 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த கூலியை பெற்றுத்தர வேண்டும். 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட படி கூலியை வழங்காவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com