கட்சிக்கு எதிரான கருத்தை பதிவு செய்தால் உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்

கட்சிக்கு எதிரான கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
கட்சிக்கு எதிரான கருத்தை பதிவு செய்தால் உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்
Published on

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். விவசாய பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், அமைப்பு செயலாளர்கள் மனோகரன், பழனிசாமி, பாஸ்கர், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. 1 கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் சசிகலா செயல்பட முடியாத நிலையில் ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்கள் தான் கழகத்தை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

எதிரிகளும், துரோகிகளும் நம்மை பார்த்து அச்சப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்றுள்ள தொண்டர் படைதான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்க இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் வழக்கில் நிச்சயம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

என்றைக்கு தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரியும். 60 சதவீத இளைஞர்கள் நம்முடன் இருப்பதால் எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்து கொண்டு நமது கழகத்தை வலுவிழக்க செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உளவுத்துறையை பயன்படுத்தி பல்வேறு தவறான தகவல்களை வலைதளத்திலும், பேஸ்புக் போன்றவற்றிலும் பரப்புகிறார்கள்.

அதனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நம் கழகத்தினர் கவனமாக இருக்க வேண்டும். கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை வந்தால் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. கட்சிக்கு எதிரான கருத்தை யாராவது பதிவு செய்தால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

கழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். உறவு என்பது வேறு. கட்சி என்பது வேறு. நட்பு என்பது வேறு. நான் அமைதியானவன். அன்பானவன். அதைவிட அழுத்தமானவன். யாருக்கும், எதற்காகவும் பயந்து பின்வாங்க மாட்டேன்.

என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. என்னை ஏமாற்ற நினைத்தால் உறவினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விட்டில் பூச்சிகளைப்போல் துரோகிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். இணையதள பதிவு உண்மையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கழகத்திற்கு பாதிக்கும் எந்த செயலையும், எந்த நபரையும் சாமானியமாக மன்னிக்க மாட்டேன். உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்.

உறவுகளையும், நட்பையும் மதிப்பவன் நான். கழக தொண்டர்கள் தான் உயிர்மூச்சு என்று நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எதிரிகளிடமும், துரோகிகளிடமும் யாராவது மாட்டிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நமது கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று உழைத்துக்கொண்டு இருக்கிறோம். ஜெயலலிதாவின் ஆட்சியை தொண்டர்கள் ஆதரவோடு அமைப்போம்.

கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடியும்வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டார்கள். அடுத்து திருவாரூர், மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மே 3-ந் தேதிக்கு பிறகு என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும். காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்பது தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை. காவிரி நீரை மத்திய அரசு பெற்று தரும் வரை போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஜெயலலிதா பேரவை மாநில துணைத் செயலாளர் ராஜேஸ்வரன், பகுதி செயலாளர் விருத்தாசலம், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலன், கோவி.மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் இந்திரா வேலாயுதம், நிர்வாகிகள் பாஸ்கர், அய்யாவு, அழகுராஜா, மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com