ஆன்லைனில் சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு

ஆன்லைனில் சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைனில் சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு
Published on

கடலூர்,

மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் அனைத்து பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கலந்து கொண்டு பேசியதாவது:-

பரிசீலனை

கடலூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் கோரி பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது பொதுமக்களுக்கு சேவை வழங்கும் வகையில் உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிலை இருப்பின், நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை விரிவாக பதிவு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் அவர்களது தலைமையிடத்தில் தங்கி பணிபுரிய வேண்டும்.

பொதுமக்களால் ஆன்லைனில் பதிவு செய்யப்படும், சாதி, வருமானம், வாரிசு, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க தாசில்தார் அளவில் கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் நில அளவைக்கு வந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக நில அளவை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்-கலெக்டர்கள் மதுபாலன், பிரவின்குமார், வருவாய் அலுவலர் என்.எல்.சி (நில எடுப்பு) கார்த்திகேயன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com