அந்தியூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

அந்தியூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
அந்தியூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
Published on

அந்தியூர்,

அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக செங்கல் சூளை தொழில் உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும்.

இங்கு உற்பத்தியாகும் செங்கல்கள் கோவை, திருப்பூர், சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு லாரியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் செங்கல்கள் அனுப்பப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கும். அதனால் ஒரு செங்கல் ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படும். செங்கல்கள் கொண்டு செல்லப்படும் தூரத்திற்கு ஏற்ப லாரி வாடகை இருக்கும்.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது லாரிகள் ஓடவில்லை. இதனால் அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு வாரம் ஒரு முறை கூலி கொடுக்கப்படும். இந்த பணத்தை வைத்து ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அந்தியூர் வாரச்சந்தைக்கு வந்து வாங்கிச்செல்வார்கள். தற்போது வேலை இல்லாததால் இவர்கள் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஒரு சில செங்கல் சூளையில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு செங்கல் சூளை உரிமையாளர்கள் சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள். சிறிய அளவிலான செங்கல் சூளை வைத்து நடத்தி வருபவர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. இதனால் இவர்கள் உணவுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதை அறிந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் சிலர் காய்கறி, மளிகை பொருட்கள், துணிகள் கொடுத்து உதவி வருகிறார்கள். சின்னதம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வாரம் ஒருமுறை இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள்.

இதுபற்றி செங்கல் சூளை தொழிலாளர்கள் கூறும்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தினமும் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

எங்களுக்கு தேவையான பொருட்களை சில தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வழங்கி வருகிறார்கள். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு முடியும் வரை எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com