கொரோனா ஊரடங்கால் பனை பொருள் உற்பத்தி பாதிப்பு

கொரோனா ஊரடங்கால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை பொருள் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் பனை பொருள் உற்பத்தி பாதிப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. இந்த பனைகளை வாழ்வாதாரமாக கொண்டு ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சாயல்குடி பகுதியில் பனை வெல்லம் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

பனை மரத்தின் நுனி முதல் அடி வரை அனைத்தும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் கொடுக்கிறது எனலாம். முதிர்ச்சியடைந்த பனைகளில் இருந்து பனஞ்சட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. அடிப்பகுதி செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்படுகிறது. பனை ஓலைகளில் இருந்து செய்யப்படும் விசிறிகள், கைவினை பொருட்கள், கூடைகள், பாய் போன்றவை நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வகையில் உபயோகமாகிறது. பனை மட்டைகள் தோட்டங்களுக்கு வேலி அமைக்க உதவுகிறது.

பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டால் பனைவிசிறிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துவிடும். பனை ஓலை கூடைகள், பெட்டிகள், உணவு பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சுப நிகழ்ச்சிகளிலும் பனை நார், பனை ஓலை பொருட்கள் கட்டாயம் இடம் பெற்று இருக்கும்.

மேலும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பாய்கள் மற்றும் கூடைகள் மீன் மார்க்கெட், பூக்கடை, இறைச்சி கடை போன்ற இடங்களில் பேக்கிங் பொருளாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடலைக்கூட பனை ஓலை பாயால் சுற்றி அடக்கம் செய்வதும் நடக்கிறது.

இவ்வாறு பலதரப்பட்ட பொருட்களை உருவாக்குவதன் மூலம் பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பெற்று வந்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மீன்பிடி தொழில் நடக்கிறது. இங்கிருந்து மீன்கள் வெளி மாவட்டங்களுக்கு பனை ஓலை கூடைகளில் வைத்து குளிர்பதன வசதியுடன் அனுப்பப்படுகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பனைத்தொழிலும் அடியோடு முடங்கி விட்டது. மேலும் பனை பொருட்களின் உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தற்போது வேலை இழந்து உள்ளனர். கோடைகாலமான தற்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பதனீர் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். அதுவும் தற்போது குறைந்துவிட்டது. மேலும் விழாக்கள் நடைபெறாததால் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பனை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள்.

எனவே தற்போதைய நிலை மாறி மீண்டும் பனை பொருட்கள் உற்பத்தி விரைவாக தொடங்கப்பட வேண்டும் என்பது இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com