கடைகளில் வியாபாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு

கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கடைகளில் வியாபாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு
Published on

பொள்ளாச்சி

கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சுற்றுலா தலங்கள் மூடல்

கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதல் முதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சுற்றுலா தலங்களை மூடுவதற்கு கடந்த மாதம் 20-ந்தேதி முதல் உத்தரவிடப்பட்டது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

வாழ்வாதாரம் பாதிப்பு

ஆழியாறில் சுற்றுலாவை நம்பி கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகளில் வியாபாரம் இல்லை.

இதனால் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிலர் கடையை மூடி விட்டனர். சுற்றுலா பயணிகள் வராததால் ஆழியாறு சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சொடி கிடக்கிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வருமானம் இல்லை

ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள், உணவகங்களை நடத்தி வருகின்றோம். அணைக்கு எதிரே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு கடைகளை நடத்தி வருகிறோம்.

இதை தவிர பழங்கள், பேன்சி ஸ்டோர் என சிறு, சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா காரணமாக ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதன் காரணமாக தொழிலில் போதிய அளவு வருமானம் இல்லை. ஏற்கனவே கடன் வாங்கி தான் தொழிலை நடத்தி வருகின்றோம்.

மாற்று ஏற்பாடு

இதற்கிடையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிலர் கடையை மூட முடியாமல் திறந்து வைத்து உள்ளனர். ஆனால் வருமானம் இல்லை. இந்த தொழிலை செய்து வந்தவர்கள் திடீரென்று மாற்று தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடைக்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே மாற்று ஏற்பாடு செய்து அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தளர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com