13 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் கலெக்டர் சிவஞானம் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ள 13 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.
13 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் கலெக்டர் சிவஞானம் தகவல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலைகள் ஊர்வலம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. சூழ்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத, ரசாயன வர்ணம் பூசப்படாத, களிமண், கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே விநாயகர் சதுர்த்தியின்போது வழிபடுவதற்கும், பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். விநாயகர்சிலை ஊர்வலத்தின்போது மேலே செல்லும் மின்சார கம்பிகளை சிலைகள் தொடாத வகையில் பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும்.

மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 13 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகளை கல் கிடங்கில் கரைக்க வேண்டும். ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும். சிவகாசி நகர்ப்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றில் கரைக்க வேண்டும். புதுப்பட்டி, மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி மடவார் வளாகம் கண்மாயில் கரைக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து வரும் சிலைகள் மடவார் வளாகத்தில் கரைக்க வேண்டும். பந்தல்குடியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும்.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுக ஊருணியில் கரைக்க வேண்டும். அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள உபயோகப்படுத்தாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியில் கரைக்க வேண்டும். கிருஷ்ணன்கோவில் பகுதியில் இருந்து வரும் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயில் கரைக்க வேண்டும். குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயில் கரைக்க வேண்டும். வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயில் கரைக்க வேண்டும். அருப்புக் கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி ரோட்டில் உள்ள பெரிய கண்மாயில் கரைக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்தில் கரைக்க வேண்டும்.

அமைதியான முறையில் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செந்தில்குமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லாம், வருவாய் கோட்டாட்சியர்(சாத்தூர்) மங்களபால சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com