மடிப்பாக்கத்தில் 2 வீடுகளில் 56 பவுன் நகை கொள்ளை

மடிப்பாக்கத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 56 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மடிப்பாக்கத்தில் 2 வீடுகளில் 56 பவுன் நகை கொள்ளை
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்டேச சாஸ்திரிகள் (வயது 65), புரோகிதர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணம் சென்றுவிட்டார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் சாமி சிலைகளுக்கு அணிவித்திருந்த நகைகள் மற்றும் பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த நகைகள் என மொத்தம் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிந்தது.

மேலும் வீட்டில் இருந்த கார் சாவியை பயன்படுத்தி, வெளியே நிறுத்தி இருந்த காரையும் திருடிச்சென்று விட்டனர்.

அதேபோல் மடிப்பாக்கம் கோவிந்தசாமி நகர், 5-வது தெருவை சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் ராஜேந்திரன் (57) என்பவரும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் சென்று இருந்தார். மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் பணியில் ஈடுபட்டு இருந்த நிர்மலா என்ற பெண் போலீஸ், பணி சுமை காரணமாக திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

* புழல் லட்சுமிபுரத்தை மனோகர் என்பவருடைய மனைவி செல்வி (வயது 50) உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

* கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த திருமங்கலத்தை சேர்ந்த ஜான்பாட்ஷா (32) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* முகப்பேர் பகுதியில் இரவு நேரங்களில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தினேஷ் (20), சிவா (20), அருண் (21), மணி (21), பாரதி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலழகி (57), அஞ்சலை (60), கார்த்திகேயன் என்ற சேட்டு (31) மற்றும் விஷ்ணு (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* குடிபோதையில் அயப்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடி மற்றும் தண்ணீர் குழாய்களை அடித்து உடைத்த சரவணன் (25) கைது செய்யப்பட்டார்.

* மணலியில் நடந்து சென்ற சண்முகம் (52) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்த சபரி ஆனந்தன் (23), யுவராஜ் என்ற உப்புலு (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*ஆவடி அருகே முனியம்மாள் (55) என்பவரது வீடு புகுந்து 1 பவுன் நகை திருடிய ராஜசேகர் (30) கைதானார்.

* பெசன்ட்நகரில் சுரேஷ், ஆனந்தன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வழக்கில் அசோக்குமார் (22) கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com