30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்

கிருஷ்ணகிரி அருகே 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.
30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்புக்காடு. இந்த காட்டில் ஏராளமான யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த காட்டில் இருந்து 30 யானைகள் உணவுக்காக வெளியே வந்தன. அவை அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தின.

பின்னர் அந்த யானைகள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சி பாவாடரப்பட்டி பக்கமாக ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தன. அந்த நேரம் அந்த யானைகளுடன் வந்த 3 மாத பெண் குட்டி யானை ஒன்று, எதிர்பாராதவிதமாக நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

வனத்துறைக்கு தகவல்

கிணற்றுக்குள் குட்டி யானை விழுந்ததும், பயங்கர சத்தத்துடன் பிளிறியது. யானையின் சத்தம் கேட்டு மற்ற யானைகள் கிணறு அருகில் வந்தன. அவை சிறிது நேரம் கிணற்றை பார்த்தபடி பயங்கர சத்தத்துடன் பிளிறின. பின்னர் அந்த யானைகள் அனைத்தும் ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி சென்று விட்டன.

இந்த நிலையில் நேற்று காலை பாவாடரப்பட்டி கிராமமக்கள் நாகராஜ் விவசாய நிலம் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்து யானை பிளிறும் சத்தம் வருவதை கண்டு பார்த்தனர். அப்போது உள்ளே குட்டி யானை வட்டமடித்தபடி சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்து கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வலை மூலம் மீட்க முடிவு

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனஅலுவலர் தீபக் பில்கி, உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, வனச்சரகர்கள் பாபு (ராயக்கோட்டை), சீதாராமன் (ஓசூர்) மற்றும் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனச்சரக வனஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் குழுவினரும், மேலும் ராயக்கோட்டை தீயணைப்பு வீரர்களும், வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் வெற்றி ஆகியோரும் அங்கு வந்தனர்.

மேலும் தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களில் பலர் தங்களின் செல்போன் மூலமாக குட்டி யானையை படம் பிடித்தனர். மேலும் இளைஞர்கள் சிலர் குட்டி யானையை மீட்பதற்காக வனத்துறையுடன் களம் இறங்கினார்கள். குட்டி யானை என்பதால் கிரேன் பெல்ட் மூலம் தூக்கினால் காயம் ஏற்படக்கூடும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. மேலும் பொக்லைன் மூலமாக அருகில் பள்ளம் தோண்டி யானையை வெளியே கொண்டு வரலாமா? என வனத்துறையினர் ஆலோசித்தனர். அதிலும் சிரமம் இருப்பதால் கைவிடப்பட்டது. இதையடுத்து வலையுடன் கீழே இறங்கி யானை குட்டியை அதில் ஏற்றி மேலே கொண்டுவருவது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

யானையை மேலே தூக்கினர்

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக சோர்வாக இருந்த குட்டி யானைக்கு பழம், கரும்புகள், தென்னை ஓலை போன்றவை கிணற்றுக்குள் போடப்பட்டது. அவற்றை குட்டி யானை சாப்பிட்டது. பின்னர் வனத்துறையினர் கிணற்றுக்குள் வலையுடன் இறங்கினார்கள். உள்ளே சென்றதும் குட்டி யானை அவர்களை நோக்கி ஓடிச்சென்றது. அப்போது யானையை வனத்துறையினர் பிடித்து வளையில் ஏற்றினார்கள். பின்னர் மேலே இருந்தவர்கள் கயிறு மூலமாக வலையை தூக்கி குட்டி யானையை மேலே கொண்டு வந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை காலை 11 மணி அளவில் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது.கிணற்றில் இருந்து வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் குட்டி யானை அங்கிருந்த பொதுமக்களை சுற்றும், முற்றும் பார்த்தது. பின்னர் அந்த யானையை வனத்துறையினர் மெதுவாக ஊடேதுர்க்கம் காட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். காட்டிற்குள் சென்றதும், குட்டி யானை தனது கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. குட்டி யானை கிணற்றில் விழுந்ததின் காரணமாக ராயக்கோட்டை அருகே நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com