திருச்சி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி வீடு முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு - தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், ரவுடிகள் உள்பட 9 பேர் கைது

திருச்சி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர், ரவுடிகள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயி வீடு முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு - தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், ரவுடிகள் உள்பட 9 பேர் கைது
Published on

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே கும்பகுறிச்சியை சேர்ந்தவர் பி.பழனிசாமி (வயது 45). விவசாயியான இவரது வீடு அந்த கிராமத்தின் நடுவே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ளது. இந்தநிலையில் கோவில் முன்பு உள்ள 4 சென்ட் புறம்போக்கு நிலத்தை பழனிசாமி ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதே ஊரை சேர்ந்த ஏ.பழனிசாமி (48) எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக மீண்டும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி ஏ.பழனிசாமி மணிகண்டம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். கடந்த 6-ந்தேதி மாலை இரு தரப்பினரையும் விசாரணைக்கு போலீஸ்நிலையத்துக்கு வரும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.

அதன்பேரில் பி.பழனிசாமி போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். ஆனால் புகார் கொடுத்த ஏ.பழனிசாமி வரவில்லை. இதனால் இரவு 7 மணிக்கு கும்பகுறிச்சி சென்ற பி.பழனிசாமி, தன் மீது புகார் கொடுத்த அவரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதன்காரணமாக 2 பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஏ.பழனி சாமிக்கு ஆதரவாக, அதே ஊரை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம் (40), வெளியூரில் இருந்து 2 ரவுடிகள் மற்றும் அடியாட்களை கும்பகுறிச்சி கிராமத்திற்கு வரவழைத்தார். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு இரவு 10 மணிக்கு ஏ.பழனிசாமி, கவுன்சிலர் அருணாசலம் ஆகியோர் அங்கு உள்ள கோவில் முன்பு திரண்டு நின்று தகராறு செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் கையில் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டையும் பி.பழனிசாமி வீடு முன் வீசி வெடிக்கச்செய்துள்ளனர். இதனால் பயந்துபோன பி.பழனிசாமி மற்றும் அவரது தம்பி கண்ணன் ஆகியோர் இதுகுறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, தகராறில் ஈடுபட்டு, வெடிகுண்டு வீசிவர்கள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கி இருந்த ஏ.பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் அருணாசலம் மற்றும் ரவுடிகள் உள்பட 9 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஒன்றிய கவுன்சிலருடன் பதுங்கி இருந்தது, திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த ரவுடி தமிழரசன் (36), லால்குடி அருகே ஆதிகுடியை சேர்ந்த ரவுடி ராஜா (25), கும்பகுறிச்சியை சேர்ந்த அடைக்கலராஜ் (30), சூறாவளிபட்டி சிங்காரவேல் (19), பொன்னுசாமி (32), தனபால் (29), மற்றும் 18 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் பி.பழனிசாமியை மிரட்டுவதற்காக, கோவில் முன்பு உள்ள வீட்டின் முன் வெடிகுண்டு வீசியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 9 பேர் மீதும், 144 தடை உத்தரவை மீறி சட்ட விரோதமாக கூடியது, ஆயுதங்களுடன் திரண்டது, தகாத வார்த்தைகளால் திட்டியது, வழிமறித்து தாக்க முயன்றது, கொலை மிரட்டல் விடுத்தது, வெடிகுண்டுகளை வீசியது உள்பட 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த இரு வெடிகுண்டுகளையும் போலீசார் பாதுகாப்பான இடத்தில்வைத்து செயல் இழக்க செய்தனர். நிலப்பிரச்சினையில் விவசாயி வீடு முன் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com