

மணல்மேடு,
மணல்மேடு அருகே வில்லியநல்லூரில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணீர்வேலி என்ற இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த நீர்தேக்க தொட்டி மூலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் முழுவதும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி எந்த நேரமும் இடிந்து கீழே விழும் வகையில் அபாய நிலையில் உள்ளது.
இந்த தொட்டிக்கு அருகே குளம் மற்றும் கோவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். எனவே சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி இருக்கும் இடத்தை கடந்து செல்லும் போது பொதுமக்கள் அச்சத்துடனே செல்கிறார்கள். இதுகுறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.