அச்சரப்பாக்கத்தில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது நெல்லையைச் சேர்ந்த 14 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் 14 பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 5 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அச்சரப்பாக்கத்தில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்தது நெல்லையைச் சேர்ந்த 14 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Published on

அச்சரப்பாக்கம்,

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பொதிகை நகரை சேர்ந்தவர் என்.சுப்பிரமணியம், இவருக்கு சொந்தமான டெம்போ டிராவலர் வேனில் தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்பட 14 பேர் கோவில் சுற்றுலா சென்றனர். நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருநெல்வேலி திரும்பி கொண்டிருந்தனர். வேனை டிரைவர் சிவபெருமாள் ஓட்டிச் சென்றார்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் தீப்பிடித்தது. இதனை பார்த்த வேனில் இருந்த அனைவரும் எகிறி குதித்து தப்பித்தனர். உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. அச்சரப்பாக்கம் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.கமலக்கண்ணன், நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர்.

பின்னர் கிரேன் மூலம் எரிந்த வண்டியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்திற்கு பிறகே தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த தீவிபத்தால் வேனில் பயனம் செய்த 5 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அ.நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com