கூடுதலாக 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்த உத்தரவு

வாக்காளர்களுக்கு பணம்-பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கூடுதலாக 21 நிலையான கண்காணிப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
கூடுதலாக 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்த உத்தரவு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 204 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு வழங்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 24 பறக்கும் படைகள், 16 வீடியோ கண்காணிப்புக்குழு, 24 நிலையான கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டது. இதில் அதிகாரிகள், போலீசார் மற்றும் வீடியோ கிராபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர 8 வீடியோ ஆய்வு குழுக்கள், 8 கணக்கு தணிக்கை குழுக்கள், 8 தேர்தல் செலவின பார்வையாளர் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவினர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விதிமீறல், தேர்தல் செலவு ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்து, வேட்பாளர்கள் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர்.

இதனால் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. எனவே, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட் கள் கொண்டு செல்வதை தடுக்க கூடுதல் குழுக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூடுதலாக 21 நிலை கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இதில் அரசு அதிகாரிகள், போலீசார், வீடியோ கிராபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே பறக்கும் படையினர் மற்றும் இதர குழுவினருக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும். கார்கள் மட்டுமின்றி அரசு, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். அனைத்து சோதனைகளையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் புகார் அளிக்கும் இடத்துக்கு விரைவாக சென்று சோதனை நடத்த வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com