ஆட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையீடு முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தி

ஆட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையீடு இருப்பதாக கூறி தேவேகவுடாவிடம் குமாரசாமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையீடு முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிருப்தி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். புதிதாக 25 மந்திரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆட்சி நிர்வாகத்தில் குமாரசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தலையிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக குமாரசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப் படுகிறது.

இது தொடர்பாக தேவேகவுடாவை குமாரசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆட்சி நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையிடுவதை நிறுத்தும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும், குடும்பத்தினர் தலையீடு இருந்தால் தன்னால் ஆட்சியை நடத்த முடியாது என்றும் குமாரசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது கம்பி மீது நடப்பது போன்றது என்றும், கூட்டணியில் சிறிய பிரச்சினை வந்தாலும் ஆட்சி கவிழ்ந்துவிடும் நிலை இருப்பதாகவும் அவர் தேவேகவுடாவிடம் எடுத்துக் கூறினார். கர்நாடக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றால், சகோதரர் எச்.டி.ரேவண்ணா உள்பட குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ யாரும் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று அவர் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.

கர்நாடக ஆட்சி நிர்வாகம் பத்மநாபநகரில் இருந்து தான் நடத்தப்படுவதாக ஏற்கனவே மக்களிடையே எதிர்க்கட்சி தவறான பிரசாரத்தை நடத்தி வருகிறது எனவும், நமது கட்சிக்கு குடும்ப கட்சி என்ற கெட்ட பெயரும் உள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் யாரும் நிர்வாகத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுமாறும் தேவேகவுடாவிடம் குமாரசாமி எடுத்துக் கூறினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com