

சோமரசம்பேட்டை,
ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ஸ்ரீரங்கம், அந்தநல்லூர், மணிகண்டம், உட்பட பல இடங்களில் பிரசாரம் செய்து, மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறினார். அப்போது அவர் பேசும்போது, 5 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்க 90 சதவீதம் மான்யம், 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் மின்மோட்டார் வசதி இல்லாத விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் போது ரூ.10 ஆயிரம் வரை மானியம், மணப்பாறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் சிப்காட் தொழிற்சாலை, மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்வி கடன் ரத்து, மின் கட்டணம் மாதம் தோறும் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் முறை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை வேளையில் பால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக மாற்றி அமர்த்தி காலமுறை ஊதியம், மகளிருக்கு உள்ளூர் பஸ்களில் இலவச பயணம், போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறினார்.
மேலும் சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம், என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மாத்தூர் கருப் பையா, செங்குறிச்சி கருப் பையா, அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், காங்கிரஸ் வட்டார தலைவர் சுந்தரம், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.