அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் உற்சாகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் உற்சாகம் அடைந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் உற்சாகம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று பிற்பகல் முதலே தொண்டர்கள் வர தொடங்கினர். வாழ்க வாழ்க வாழ்கவே தி.மு.க. வாழ்கவே, வெல்க வெல்க வெல்கவே மு.க.ஸ்டாலின் வெல்கவே என அண்ணா அறிவாலயமே அதிரும் அளவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க. கொடியை கையில் ஏந்தி அண்ணா அறிவாலயம் வளாகம் முழுவதும் தொண்டர்கள் சுற்றி சுற்றி வந்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர்.

மேலும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடும் வகையில் சரவெடி உள்பட பட்டாசுகள் வெடித்து ஆர்ப்பரித்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி உற்சாகம் அடைந்தனர். பெண்கள் ஆடிப்பாடி தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அண்ணா அறிவாலயம் திருவிழா கோலம் பூண்டது.

திரும்பிய திசையெங்கும் தி.மு.க.வினரின் வெற்றி கொண்டாட்டங்களால் அண்ணா அறிவாலயம் உற்சாகத்தில் மிதந்தது. நேற்று முன்தினம் கூட தேர்தல் வெற்றியை வீடுகளில் இருந்தே கொண்டாடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அமரபோவதை எண்ணி, தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவையும் மறந்து உற்சாகத்தில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் திரள தொடங்கினர்.

இதற்கிடையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். திரண்டிருக்கும் தொண்டர்களுக்கு இடையே அவர் வேண்டுகோள் விடுத்து பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோளை வைக்கும்படி கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவுகள் நிச்சயமாக நமக்கு வெற்றி செய்தியை தரப்போகிறது. எனவே தற்போதைய சூழலை கருதி வீட்டில் இருந்தே வெற்றியை கொண்டாடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆகவே கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அரசு பொறுப்பை ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு நாளை (இன்று) முதல் அதற்குரிய எல்லா நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எனவே கட்சியினர் பொறுப்புணர்ச்சியோடு இதை உணர்ந்து இங்கிருந்து கலைந்து செல்லவேண்டும். எந்தவித கொண்டாட்டத்தையும் வீதிக்கு வந்து நடத்தாமல், அவரவர் குடும்பத்துடன் வீடுகளிலேயே கொண்டாடுங்கள். யாரும் வீதிக்கு வரக்கூடாது, அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருக்கும் தொண்டர்கள் உடனடியாக கலைந்து செல்லவேண்டும்.

பட்டாசுகள் வெடிப்பது உள்ளிட்ட எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே தொண்டர்கள் தயவுசெய்து இந்த வேண்டுகோளை ஏற்று கலைந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அதனைத்தொடர்ந்து தி.மு.க. தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com