அரவக்குறிச்சியில் ரூ.5 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

அரவக்குறிச்சியில் ரூ.5 கோடியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சியில் ரூ.5 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
Published on

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி பகுதிக்கு, பள்ளப்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழை காலங்களில் மின் கம்பிகளில் ஏதாவது இடர்பாடுகள் ஏற்பட்டால் அரவக்குறிச்சி பகுதி முழுவதும் மின் தடை ஏற்படும். தற்போது இந்த பகுதிகளில் அடிக்கடி குறைவழுத்த மின்சாரமே கிடைப்பதால் மின்சாதன பொருட்கள் சரிவர இயங்குவதில்லை. திடீரென அதிக அழுத்தத்துடன் மின்சாரம் கிடைப்பதால் மின் சாதன பொருட்களில் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறைவழுத்த, அதிக மின் அழுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சிரமங்களை போக்க வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக, அரவக்குறிச்சி குமரன்வலசு அருகில் திருமலை நகரில் ரூ.2 கோடிக்கு நிலம் வாங்கப்பட்டு அதில் தற்போது ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் கூறியதாவது:-

அரவக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். தற்போது, பேருராட்சி பகுதியில் 35 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் மின் கம்பங்கள் நடப்படுகிறது.

மின்கம்பங்கள் நடுவதற்கு ஒரு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மின் கம்பங்கள் நடும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த மின்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் அரவக்குறிச்சி பகுதி மக்களுக்கு சீரான மின்வினியோகம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com