ஆற்காட்டில் பரபரப்பு போலீஸ் நிலைய ஓய்வறையில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள் - போலீசார் அலறியடித்து ஓட்டம்

ஆற்காடு போலீஸ் நிலைய ஓய்வறையில் வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அங்கிருந்த போலீசார் அலறியடித்து ஓடினர்.
ஆற்காட்டில் பரபரப்பு போலீஸ் நிலைய ஓய்வறையில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள் - போலீசார் அலறியடித்து ஓட்டம்
Published on

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையம் அருகில் போலீசார் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்த அரசு தடை விதித்த பொருட்களை பறிமுதல் செய்து வந்து, மூட்டைகளில் கட்டி ஓய்வறையில் வைத்திருந்தனர். அத்துடன் பட்டாசுக்கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு ரக பட்டாசுகள், அதைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வந்து மூட்டைகளில் போலீசார் கட்டி வைத்திருந்தனர்.

நேற்று காலை போலீசார் ஓய்வெடுக்கும் அறையைப் புதுப்பிக்கும் பணி நடந்தது. அதற்காக, அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி பொருள் வெடித்து சிதறியது.

அந்த சத்தத்தைக் கேட்டு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அலறியடித்து ஓடினர். போலீஸ் நிலையம் அருகிலேயே போலீசார் குடியிருப்புகளும், அதைச் சுற்றி வீடுகளும் உள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பலர், வெடி சத்தத்தைக் கேட்டு போலீஸ் நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததாக நினைத்து போலீஸ் நிலையம் முன்பாகத் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது நநில பொருட்கள் உடைந்தன. நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அதில், பறிமுதல் செய்து வைத்திருந்த வெடிபொருட்களில் ஏதேனும் ஒன்றில் உராய்வு ஏற்பட்டு வெடித்திருக்கலாம், எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com