ஆரணியில் தற்காலிக காய்கறி வணிக வளாகம் அமைச்சர் திறந்து வைத்தார்

ஆரணியில் தற்காலிக காய்கறி வணிக வளாகத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
ஆரணியில் தற்காலிக காய்கறி வணிக வளாகம் அமைச்சர் திறந்து வைத்தார்
Published on

ஆரணி,

ஆரணியில் நகராட்சி சார்பில் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடையின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் மேலும் 6 கடைகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து புதிதாக கடைகள் கட்டுவதற்காக காய்கறி மார்க்கெட் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக காய்கறி மார்க்கெட் கடைகளில் வியாபாரம் செய்து வந்த சில்லரை வியாபாரிகள் ஒன்றுகூடி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோரிடம், எங்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து தந்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்துங்கள் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காய்கறி மார்க்கெட் சில்லரை வியாபாரிகளுக்காக இடம் தேர்வு செய்து அதனை வியாபாரிகள் சங்கத்தின் பொறுப்பில் விடப்பட்டது. ஒட்டு மொத்தமாக ஒரே அளவிலான 112 கடைகள் அமைத்து ஏற்கனவே இருந்து வந்த நகராட்சி காய்கறி கடைகளின் வியாபாரிகள் தங்களின் சொந்த செலவில் கடைகள் அமைத்தனர்.

இந்த தற்காலிக காய்கறி வணிக வளாகத்தின் திறப்பு விழா நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., ஆரணி உதவி கலெக்டர் மைதிலி, வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சாதிக்பாஷா, செயலாளர் மோகன், அரசு வக்கீல் கே.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தற்காலிக காய்கறி மார்க்கெட்டை திறந்து வைத்து பார்வையிட்டு காய்கறிகளை வாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையிலும் வியாபாரிகளின் நலன் கருதியும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டுமே இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வண்டிமேடு பகுதியில் வியாபாரம் செய்து வரும் காய்கறி வியாபாரிகள் அவர்களாகவே வியாபாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நகராட்சி மற்றும் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் அங்கு காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் அமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். என்றார்.

அப்போது நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு வருங்கால வைப்பு நிதி கடன் வழங்கப்படவில்லை, குடியிருப்பு பகுதிகள் பழுதடைந்துள்ளது, துப்புரவு பணிகள் மேற்கொள்ள பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் வேலைபளு அதிகமாக உள்ளது. எனவே, புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர், கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 243 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் வழங்கி பேசினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com