அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க ஆதிச்சநல்லூரில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்ட எதிர்ப்பு

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க ஆதிச்சநல்லூரில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்ட எதிர்ப்பு
Published on

ஸ்ரீவைகுண்டம்,

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள், இரும்பாலான ஆயுதங்கள், அணிகலன்கள் போன்றவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை உலகறியச் செய்தது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில், ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே உள்ள சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் நில அளவீடு செய்து, அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கினர். தரையின் அடியில் உள்ள பொருட்களை கண்டறியும் வகையில், ரேடார் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே, ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் இரவில் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது தரைக்குள் இருந்த சில முதுமக்கள் தாழிகள் சேதம் அடைந்தன. இதையடுத்து அங்கு மட்பாண்டங்கள் குவியலாக கிடந்தன.

இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டக் கூடாது, கைகளால் கடப்பாரை கம்பி மூலமே பள்ளம் தோண்ட வேண்டும். அங்கு கிடைக்கப்பெறும் பழங்கால பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com