ஆவடியில், சர்வர் கோளாறு காரணமாக தாமதமாக தொடங்கிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு - தரையில் அமர்ந்து பெண்கள் போராட்டம்

ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாக தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த பெண்கள், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடியில், சர்வர் கோளாறு காரணமாக தாமதமாக தொடங்கிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு - தரையில் அமர்ந்து பெண்கள் போராட்டம்
Published on

ஆவடி,

தமிழகம் முழுவதும் நேற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற 11 மையங்களில் ஆவடியை அடுத்த முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேர்வு மையமும் ஒன்று. இங்கு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் 2 பகுதிகளாக 1,100 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஒரு நபருக்கு 3 மணிநேரம் ஆன் லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது.

இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இளம்பெண்கள், கர்ப்பிணிகள், திருமணமான பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் காலையிலேயே கல்லூரிக்கு வந்தனர். ஆனால் சர்வர் கோளாறு காரணமாக காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு, சரியான நேரத்துக்கு தொடங்க முடியாமல் தாமதமாக தொடங்கியதாக தெரிகிறது.

இதனால் காலையில் தேர்வு எழுதவேண்டிய நபர்களே மதியம் 2 மணி வரை எழுதினர். இதனால் மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களால் உரிய நேரத்துக்கு எழுத முடியாமல் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாலை 5 மணி ஆகியும் சர்வர் கோளாறு சரி செய்யப்படாமல் இதே நிலை நீடித்தது. இதனால் தேர்வு நேரம் தள்ளிப்போனது. கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், சரியான நேரத்தில் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் தேர்வு எழுத வந்த பெண்கள் பலர் ஆத்திரம் அடைந்தனர்.

அங்கிருந்த அதிகாரிகளுடன் தேர்வு எழுத வந்த பெண்களும், அவர்களின் உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்து தரையில் அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆவடி தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 6 மணிக்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நீங்கள் தேர்வு எழுத போதுமான நேரத்தை ஒதுக்கி தருகிறோம். அனைவரும் தேர்வு எழுதலாம். நேரம் அதிகமானால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம். உங்களுக்கு உணவும் வழங்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெண்கள், தேர்வு எழுத உள்ளே சென்றனர். ஆனால் ஒருசிலர் நாங்கள் தேர்வு எழுத மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு, சர்வர் கோளாறால் இரவு 7.30 மணி வரை நீடித்தது. காலையில் 441 பேரும், மதியம் 366 பேரும் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com