ஆவடியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட கலெக்டர்

ஆவடியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரூ.200 அபராதம் விதித்ததுடன், அவர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.
ஆவடியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட கலெக்டர்
Published on

ஆவடி,

ஆவடி மாநகராட்சி சார்பில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர், மாற்றுத்திறனாளி ஒருவருடன் சேர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.

பின்னர் ஆவடி மாநகராட்சியில் வைக்கப்பட்டு இருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தை திறந்து வைத்த மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டார். அத்துடன் மாநகராட்சி அலுவலக மாடியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத பலூனையும் பறக்கவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சியில் இருந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டர் பொன்னையா, திடீரென புதிய ராணுவ சாலை, நேரு பஜார் ஆகிய இடங்களுக்கு சென்று முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்து, அவர்களுக்கு முக கவசத்தை வழங்கினார். அவரை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்த சுமார் 36 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து ரூ.7,200 வசூல் செய்தனர். அத்துடன் மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com