அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை சிவசேனா தான் அகற்றியது சஞ்சய் ராவத் எம்.பி. சொல்கிறார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை சிவசேனா தான் அகற்றியது என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை சிவசேனா தான் அகற்றியது சஞ்சய் ராவத் எம்.பி. சொல்கிறார்
Published on

மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நேற்று அறிவித்தது.

முன்னதாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொள்வாரா? என சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே எப்போதும் அயோத்தி செல்வார். அவர் மராட்டியத்தின் முதல்-மந்திரியாக இல்லாத போதும் அயோத்திக்கு சென்றார். முதல்-மந்திரி ஆன பின்னரும் அங்கு சென்றார். சிவசேனா மற்றும் அயோத்தி இடையேயான உறவுகள் அப்படியே உள்ளது. இது ஒரு அரசியல் உறவு அல்ல. நாங்கள் அரசியலுக்காக அயோத்திக்கு செல்லவில்லை.

மாறாக, சிவசேனா தான் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையை அமைத்தது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான அனைத்து முக்கிய தடைகளையும் அகற்றியது சிவசேனா தான். அது அரசியலுக்காக அல்ல. சிவசேனாவினர் நம்பிக்கை மற்றும் இந்துத்வாவிற்கான தியாகங்களை செய்தார்கள்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள எத்தனை பேர் அழைக்கப்படுகிறார்கள். சமூக விலகலை கடைபிடிப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டி உள்ளது. அவர்கள் எப்படிப்பட்ட அரசியல் சமூக விலகலை கடைப்பிடிப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் கட்டுவதன் மூலம் கொரோனா தொற்றுநோயை ஒழிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார். இதுபற்றி சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, கொரோனா வைரசுக்கு எதிராக வெள்ளை உடையில் நமது டாக்டர்கள் போராடுகிறார்கள். அவர்களை கடவுளின் தூதர்களாகவே பார்க்கிறேன். மதம் மற்றும் கடவுள் மீதான கட்சியின் நம்பிக்கை அப்படியே உள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com