பெங்களூருவில் 2-வது நாளில் 3,659 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது மாநகராட்சி கமிஷனர் தகவல்

பெங்களூருவில் 2-வது நாளில் 3,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
பெங்களூருவில் 2-வது நாளில் 3,659 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் 2-வது நாளில் 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி பணி நடைபெற்றது. இதில் 2-வது நாளில் 6,226 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்திருந்தோம். இதில் 3,659 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் 141 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 7,300 மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 42 ஆயிரம் பேரும், மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் 28 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு 1.82 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறவர்கள் அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள கோவின் செயலியில் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சில பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதனால் அந்த செயலியில் பதிவு செய்யாமல், நேரடியாக வருபவர்களுக்கு விவரங்களை சேகரித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் பயப்பட தேவை இல்லை. இவ்வாறு மஞ்சுநாத்பிரசாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com