‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் - சென்னை மாணவரின் தந்தை கைது

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் - சென்னை மாணவரின் தந்தை கைது
Published on

தேனி,

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 4 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் என மொத்தம் 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மாணவி மற்றும் மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

பின்னர், சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன், மற்றொரு மாணவர் பிரவீணின் தந்தை சரவணன், மாணவர் ராகுலின் தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோருக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதிக்கு மட்டும் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரிஷிகாந்த் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவர் ரிஷிகாந்த், அவருடைய தந்தை ரவிக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர், அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை தொடர்ந்து, மாணவரின் கைரேகையையும், அவர் நீட் தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கைரேகையையும் ஒப்பிட்டு பார்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கப்பட்டதில், கைரேகையில் வேறுபாடு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரசு தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவரின் தந்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், கடந்த 29-ந்தேதி ரவிக்குமார் மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த விசாரணையில், அவர் தனது மகன் நீட் தேர்வு எழுதவில்லை என்றும், ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒரு நபர் தேர்வு எழுதியதாகவும் கூறியதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மாணவர் ரிஷிகாந்த்துக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு, ரவிக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சரண் அடைய உத்தரவிட்டது. மேலும், அடுத்த 60 நாட்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ரவிக்குமார் மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவர் நேற்று பகல் 2 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நீட்தேர்வு ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய இடைத்தரகர் யார்? அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com