ஊத்துக்கோட்டை அருகே 2 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது

ஊத்துக்கோட்டை அருகே 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை அருகே 2 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது
Published on

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை ஊராட்சியில் காட்டு செல்லிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின் புறத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி 2 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலு மேற்பார்வையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் காஞ்சீபுரம் அருகே உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்கி (வயது 22), மண்ணிவாக்கத்தை சேர்ந்த சத்யா (27) என்பதும், காஞ்சீபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த உதயா என்பவரை கொலை செய்ததற்கு பழி வாங்க இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (35). ரவுடி. இவரது மனைவி விஜயலட்சுமி (30), தம்பி உதயா (28). இவர்களில் உதயா கடந்த ஆண்டு ஜூலை 23-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இவரை காஞ்சீபுரம் அருகே உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்கி (22), மண்ணிவாக்கத்தை சேர்ந்த சத்யா (27) ஆகியோர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. வேறு ஒரு கொலை வழக்கில் சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார்.

அப்போதுதான் அவரது தம்பி உதயா கொலை நடந்தது. இதற்கு பழி தீர்க்க சூர்யா தன்னுடைய மனைவி விஜயலட்சுமி மூலம் விக்கி, சத்யா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அவர்களிடம் நண்பராக பழகிய துராபள்ளம் கிராமத்தை சேர்ந்த அன்பு (30) என்ற ரவுடி மூலம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காட்டு செல்லி அம்மன் கோவில் பகுதிக்கு விக்கி, சத்யாவை வரவழைத்து கூலிப்படையை சேர்ந்த 10 பேர் மூலம் கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி அன்பு கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யாவையும் இந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

கூலிப்படையை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அன்பு கடந்த மாதம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அன்புவின் மனைவி ஊத்துக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரை சந்தித்து ஆறுதல் கூற இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த விஜயலட்சுமி நேற்று ஊத்துக்கோட்டைக்கு வந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com