

வண்டலூர்,
காஞ்சீபுரம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் பின்புறம் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கில் தொடர்புடைய கார், பஸ், லாரி, ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் முள்புதர்கள் மண்டி இருந்தது.
நேற்று மதியம் 1 மணி அளவில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைபார்த்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்த போலீசார் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே வாகனங்கள் மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதன் காரணமாக போலீஸ் குடியிருப்பு பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்துகொண்டிருந்த வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வழக்கில் சிக்கிய 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந்தேதி இதே இடத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது.
பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறத்தில் வழக்கில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அள்ளுவதற்கு பதில் தீவைத்து எரித்து விடுகின்றனர்.
இதன் காரணமாகத்தான் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுகிறது. இனிமேல் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் குப்பையை கொட்டி தீ வைத்து யார் எரித்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் சரியான முறையில் குப்பைகளை ஊழியர்கள் அள்ளுவதற்கு பதில் சாலையோரம், மற்றும் காலியாக உள்ள மனைகள் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு சென்றுவிடுகின்றனர். இப்படி குப்பைகளை தீ வைத்து எரிக்கும்போது அருகில் உள்ள பகுதியில் தீ பரவி இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. மேலும் சாலையோரங்களில் குப்பைகள் கொளுத்தப்படும் போது சாலைகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகனத்தில் செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் வருகிறது.
மேலும் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதற்கு பதில் குப்பைகளை அகற்றி உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.