சாத்துமதுரையில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 30 பேர் காயம்

சாத்துமதுரை கிராமத்தில் நடந்த காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
சாத்துமதுரையில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 30 பேர் காயம்
Published on

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த சாத்துமதுரை கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதனையொட்டி காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. காளைகளுக்கு அடிபடாமல் இருக்க சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த காளைகளுக்கு பென்னாத்தூர் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்து களம் இறங்குவதற்கு அனுமதி அளித்தனர். விழாவை வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து அதிக அளவில் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் காலை 9 மணியளவில் விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடியது. காளைகள் ஓடும் வீதியில் யாரும் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு விதிமுறைக்கு உட்படாமல் பார்வையாளர்கள் காளை ஓடும் வீதியில் அதிகளவில் குவிந்தனர்.

கூட்டத்தை கண்டதும் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. பலர் காளைகளை தொடுவதற்காக களத்துக்குள் இறங்கினர். சிலர் ஆரவாரத்துடன் காளைகளை விரட்டினர். மிரண்ட ஒரு சில காளைகள் பார்வையாளர்களை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். மாடுகள் முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

காளை விடும் விழாவை வேலூர் தாசில்தார் பாலாஜி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்தனர், வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 70 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com