சாக்பீசில் சிற்பங்களை வேகமாக வடிவமைத்த தர்மபுரி மாணவருக்கு உலக சாதனை விருது சான்றிதழ் வழங்கி கலெக்டர் மலர்விழி பாராட்டு

சாக்பீசில் சிற்பங்களை வேகமாக வடிவமைத்த தர்மபுரி மாணவருக்கு உலக சாதனை விருது சான்றிதழ் வழங்கி கலெக்டர் மலர்விழி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சாக்பீசில் சிற்பங்களை வேகமாக வடிவமைத்த தர்மபுரி மாணவருக்கு உலக சாதனை விருது சான்றிதழ் வழங்கி கலெக்டர் மலர்விழி பாராட்டு
Published on

தர்மபுரி,

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கவியரசு (வயது 19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவர் தற்போது டிப்ளமோ இறுதியாண்டு படிப்பை முடித்து உள்ளார். இவர் சாக்பீசில் பல வண்ண சிற்பங்களை செதுக்கும் கலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். சாக்பீசில் பழங்கால கோவில்கள், தெய்வங்களின் உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்குவதில் சாதனை படைத்து உள்ளார். கவியரசுவின் சிற்பக்கலை திறன் குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உலக சாதனைக்கான சிற்பக்கலை போட்டியில் பங்கேற்க கவியரசுக்கு கலெக்டர் மலர்விழி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

கவியரசு சாக்பீசில் 4 நிமிடம் 29 நொடிகளுக்குள் 6 மில்லிமீட்டர் அளவில் ஒரு புத்தர் சிலையை வேகமாக செதுக்கினார். மிகக்குறுகிய நேரத்தில் சாக்பீசில் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை சிற்பம் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தது. அதற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற கவியரசு தேர்வு செய்யப்பட்டார். சாதனை படைத்ததற்கான பாராட்டு சான்றிதழை கவியரசுக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வழங்கி பாராட்டினார்.

இதுபற்றி கவியரசு கூறுகையில், சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் சாக்பீஸ், பென்சில் மூலம் சிறிய சிற்பங்களை செய்வதற்கான ஆர்வம் ஏற்பட்டது. பல்வேறு வகையான சிற்பங்களை வடிவமைத்து வந்தேன். என்னிடம் உள்ள திறமையை கண்டறிந்த கலெக்டர் உலக சாதனைகளுக்கு சான்றிதழ் அளிக்கும் நிறுவனத்திற்கு எனது படைப்புகளை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்மூலமாக எனக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com