

சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர், சேத்தியாத்தோப்பு கடைவீதியில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுடைய மகன் வருண்(18). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார். மகள் விஷ்வா(16), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சிவக்குமார், தினமும் காலையில் சென்னை-கும்பகோணம் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலையில் சிவக்குமார் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. பின்னர் அந்த பஸ், சாலையோர மரக்கிளையில் மோதி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இத பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ஜவஹர்லால் மற்றும சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.