சென்னையில், ரூ.200 கோடியில் மேலும் 10 மெட்ரோ ரெயில்கள் ஆந்திராவில் இருந்து முதல் ரெயில் கொண்டு வரப்பட்டது

சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியான திருவொற்றியூர் விம்கோ நகர் வரை இயக்குவதற்காக ரூ.200 கோடியில் 10 புதிய ரெயில்கள் வாங்கப்பட உள்ளன. அதில் முதல் ரெயில் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னையில், ரூ.200 கோடியில் மேலும் 10 மெட்ரோ ரெயில்கள் ஆந்திராவில் இருந்து முதல் ரெயில் கொண்டு வரப்பட்டது
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் 45 கி.மீ. மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து ரூ.3,770 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் வரை 9.051 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணி அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது.

இந்தநிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இயக்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு கடன் உதவியுடன் ரூ.200 கோடி மதிப்பில் 10 மெட்ரோ ரெயில்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டு நிறுவனமான ஆல்ஸ்டோம் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த நிறுவனத்துக்கு ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி மையத்தில் ரெயில்களுக்கான உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தொடர்ந்து அங்கு தயாரிக்கப்பட்ட முதல் ரெயில் கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கொடியசைத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆல்ஸ்டோம் நிறுவன நிர்வாக இயக்குனர் ஓடின் புருனோ ஆல்ஸ்டோம், மெட்ரோ ரெயில் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவு இயக்குனர் நரசிம் பிரசாத் மற்றும் தினேஷ் போக்ரா, விஜய் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

புதிதாக வந்துள்ள ரெயிலை பயணிகள் சேவைக்காக பயன்படுத்துவதற்கு முன்பாக பணிமனையிலும் மெயின் லைனிலும் மெதுவாகவும், வேகமாகவும் இயக்கி பார்த்து சோதனையிட உள்ளோம். தொடர்ந்து வழக்கமான இழுவை மற்றும் பிரேக் சோதனைகள் நடக்க இருக்கிறது.

மீதம் உள்ள 9 ரெயில்களும் பல்வேறு கட்ட உற்பத்தியில் உள்ளன. அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து ரெயில்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com