சென்னையில் 80 மார்க்கெட் பகுதிகளில் தடுப்பூசி மையம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில் 80 மார்க்கெட் பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் 80 மார்க்கெட் பகுதிகளில் தடுப்பூசி மையம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

சென்னை,

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ், பொதுமக்களுக்கு மறுபயன்பாட்டுடன் கூடிய முககவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையில் ஏற்கனவே கொரோனா தொற்று பரவிய இடங்களை தவிர்த்து, தற்போது மீதமுள்ள இடங்களில் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரே குடும்பங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே தொற்று பரவுகிறது. தடுப்பூசி போடுவதால் மட்டுமே இதனை தடுக்க முடியும். சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட 80 மார்க்கெட் பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாட்களில் 10 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு விடும். அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் 40 நாட்களில் நல்ல மாற்றத்தை கொண்டு வரமுடியும். இன்னும் 3 மாதம் முககவசம் கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சராசரியாக 52 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி உள்ளது. இதன் மூலம் விஞ்ஞான ரீதியாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கலாம். சென்னையில் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com