

சென்னை,
சென்னை சென்டிரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக நூதன முறையில் பயணிகளிடம் பணத்தை அபேஸ் செய்யும் போக்கு சமீப நாட்களாக நடைபெறுவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு படை குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சென்டிரலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுனில்பர்மன்(வயது 23), நூதன முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிகளிடம் பணத்தை அபேஸ் செய்யும்போது பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது.
சென்னை சென்டிரலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் தவிப்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது தான், சுனில்பர்மனின் முதல் வேலை. பிறகு, அந்த பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்தது போலவும், அதில் பயணிகளின் பெயர் இடம்பெற்று இருப்பது போலவும் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்து பயணிகளிடம் பணத்தை வாங்கிவிடுவார். ஆனால் அது போலியானது.
பயணிகளும் அந்த டிக்கெட்டை நம்பி ரெயிலில் ஏறி பயணம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு அபராத தொகை செலுத்துவார்கள். இப்படியாக தொடர்ந்து பல பயணிகளிடம் இவர் ஏமாற்றி இருக்கிறார். சென்னை மட்டுமல்லாது, பெங்களூரு, கொல்கத்தாவிலும் இதே வேலையைத்தான் செய்து இருக்கிறார். இப்போது அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.