சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகமான ஆய்கார் பவனில் நடந்த குடியரசு தின விழாவில், முதன்மை தலைமை ஆணையர் சுஷில்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் கிராமப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இலாகா ஆணையர் அலுவலகத்தில் தலைமை ஆணையர் எம்.அஜித்குமார் தேசிய கொடியேற்றி, பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். விழாவில், 60 கிலோவாட் திறன்கொண்ட மேற்கூரை சூரிய ஒளி மின் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில், மாநில அலுவலக நிர்வாக இயக்குனர் ஆர்.சித்தார்த்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பாதுகாப்பு படைவீரர்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்துள்ள பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தில், பேசின் மேலாளர்(காவிரி) டி.ராஜேந்திரன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். துறைமுக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படையினரின் பயிற்சி மைதானத்தில் துறைமுக தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியேற்றி பாதுகாப்பு படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. தென்மண்டல அலுவலகத்தில் தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில், நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ் தேசிய கொடியேற்றினார்.

அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்(ஐ.ஓ.பி.) மத்திய அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியகுமார் தேசிய கொடியேற்றினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர் மற்றும் வாத்தியக்குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில், 2 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான நேரடி வங்கிக்கடன் காசோலைகள், 2015-16-ம் ஆண்டில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 6 மருத்துவ அலுவலர்களுக்கு செயல்திறன் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த 92 பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றையும் கமிஷனர் வழங்கினார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வெ.அன்புச்செல்வன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்தியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

கோயம்பேட்டில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான் தேசிய கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். சேப்பாக்கம் எழிலகத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தேசிய கொடியேற்றினார்.

பல்லவன் இல்லத்தில், மேலாண் இயக்குனர் ஆ.தாணுலிங்கம் தேசிய கொடியேற்றி சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சத்யபிரத சாகு தேசிய கொடியேற்றி நேர்மையாக பணியாற்றிய 7 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து -சமய அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com