சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் பயன்படுத்திய கார்கள் இடம் பெற்றன

பழசுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை பறைச்சாற்றும் பாரம்பரிய கார்கள் கண்காட்சி சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நேற்று நடைபெற்றது.
சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் பயன்படுத்திய கார்கள் இடம் பெற்றன
Published on

சென்னை,

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை திரைப்பட நடிகை ரேவதி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 1920-ம் ஆண்டு முதல் 1970 வரை சாலைகளில் பவனி வந்த ரோல்ஸ் ராயஸ், ஜாக்குவார், மெர்சடஸ் பென்ஸ், எம்.ஜி., டார்ஜ் பிரதர்ஸ், செவர்செல்ட், போர்டு, பியுசியட், ஆஸ்டின் உள்பட நிறுவனங்களில் 140-க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்களும், 40-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இடம் பெற்றிருந்தன.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஏ.வி.எம். ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்பன், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் போன்ற திரையுலக பிரமுகர்கள் பயன்படுத்திய கார்களும், திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியை அலங்கரித்தன.

புகைப்படங்களிலும், பழைய திரைப்படங்களிலும் பார்த்து ரசித்த கார்கள், ஒரே இடத்தில் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார்பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கார்கள் இயங்கும் திறன், ஹாரன் சப்தம், பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com