குரோம்பேட்டையில் சரக்கு வேன் அதிபருக்கு கத்திக்குத்து: டிரைவர் கைது

குரோம்பேட்டையில், முன்விரோதம் காரணமாக சரக்கு வேன் அதிபரை கத்தியால் குத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குரோம்பேட்டையில் சரக்கு வேன் அதிபருக்கு கத்திக்குத்து: டிரைவர் கைது
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் பெரியார் நகர், குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் சொந்தமாக 4 சரக்கு வேன்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரிடம் தாம்பரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் செல்லதுரை (29) என்பவர் சரக்கு வேன் ஓட்டி வந்தார்.

ஒரு வாரம் மட்டும் வேலை செய்தநிலையில் செல்லதுரையின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை குமார் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். அப்போது செல்லதுரை, தான் ஒரு வாரம் வேலை செய்ததற்கான சம்பளத்தை தரும்படி கேட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரிடம் வேலை செய்யும் 5 பேர் டிரைவர் செல்லதுரையை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த செல்லதுரை, குமாரின் சரக்கு வேன் கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் சிட்லபாக்கம் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

பின்னர் செல்லதுரையை தாக்கியதற்காக குமார் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்த போலீசார், சரக்கு வேன் கண்ணாடியை உடைத்ததற்காக செல்லதுரையிடம் இருந்து பணத்தை வாங்கி குமாரிடம் கொடுத்தனர்.

இந்த முன்விரோதம் காரணமாக குமாரை கொலை செய்ய செல்லதுரை திட்டமிட்டார். இதற்காக அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தார். நேற்றுமுன்தினம் குரோம்பேட்டையில் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை அருகே சர்வீஸ் சாலையில் தனது நண்பரின் ஆட்டோவில் அமர்ந்து குமார் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த செல்லதுரை, திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குமாரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கழுத்து, முதுகு, கை, மார்பு, தொண்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிட்லபாக்கம் போலீசார், சம்பவம் தொடர்பாக டிரைவர் செல்லதுரையை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com