கோவையில், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய 5 பேர் கைது

கோவையில் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையில், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடிய 5 பேர் கைது
Published on

கோவை,

கோவை மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத்தடுக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சந்திரசேகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், அடிக்கடி வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரத்தினபுரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

உடனே போலீசார் அவர்கள் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த சுதாகர் (வயது 23), இளவரசன் (22), பிரகாஷ் (23), அரவிந்தன் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்கிற சிவசெந்தில் (25) என்பதும், கோவையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலுக்கு பிரகாஷ் தலைவராக இருந்துள்ளார். சைடு லாக் போட்டு இருக்கும் மோட்டார் சைக்கிளை எப்படி அந்த லாக்கை உடைத்து ஸ்டார்ட் செய்து திருடுவது குறித்து பயிற்சி கொடுத்து உள்ளார். அதன்படி அவர்கள் 5 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர்.

குறிப்பாக இவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைத்தான் குறிவைத்து திருடுவார்கள். இதற்காக அவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து தனியார் ஏ.சி. பஸ்களில் செல்வது வழக்கம். கோவைக்கும் அப்படிதான் வந்து உள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு முன்பு 5 பேரும் அங்கு சென்று, அதன் அருகில் 15 நிமிடங்கள் நின்று கண்காணிப்பார்கள்.

அதில் ஒருவன் மெதுவாக அந்த மோட்டார் சைக்கிள் அருகே சென்று, அதன் சைடு லாக்கை உடைப்பான். மற்றொருவன் சாவிக்கு செல்லும் ஒயரை அறுத்துவிட்டு அதை ஸ்டார்ட் செய்து, அந்த 2 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் ஏறி ரெயில் நிலையம் சென்று விடுவார்கள்.

இவ்வாறு ஒரு பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிவிட்டு, ரெயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று, அதை குறைந்த விலைக்கு விற்று விடுவார்கள். யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் அவற்றை பிரித்து உதிரிபாகங்களை விற்று விடுவார்கள். பின்னர் அந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து உள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதான 5 பேரிடம் இருந்து 10 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com