கோவையில் மேலும் பல இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க திட்டம் மாநகராட்சி அதிகாரி தகவல்

கோவையில் குடிநீர் ஏ.டி.எம்.களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மேலும் பல இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் மேலும் பல இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க திட்டம் மாநகராட்சி அதிகாரி தகவல்
Published on

கோவை,

கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி உக்கடம் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் ஏ.டிஎம். அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தி வருகின்றனர். நிலத்தடி நீரை எடுத்து அதை சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் நாணயத்தை எந்திரத்தில் சொருகினால் நாம் வைக்கும் பாட்டிலில் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும்..

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 130 குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏ.டி.எம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு தினமும் 150 லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர 20 லிட்டர் கேனில் குடிநீர் நிரப்பி ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இந்தவகையில் தினமும் 150 கேன்கள் வரை விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே மேலும் பல இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குடிநீர் ஏ,டி.எம்.கள் வங்கி கடன் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஒரு குடிநீர் ஏ.டி.எம். அமைக்க ரூ.12 லட்சம் வரை செலவாகிறது. குடிநீர் ஏ.டி.எம்.களில் விற்பனையாகும் குடிநீர் தவிர கேன்களிலும் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. 20 லிட்டர் குடிநீர் கேன் ரூ.20-க்கு விற்றால் அதில் 4 ரூபாய் டெலிவரிக்கும், 2 ரூபாய் மாநகராட்சிக்கும், 6 ரூபாய் குடிநீர் ஏ.டி.எம். அமைத்த தனியார் நிறுவனத்துக்கும், 8 ரூபாய் மகளிர் சுய உதவி குழுவினருக்கும் கிடைக்கும்.

கோவையில் மேலும் பல இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்க திட்டமிடப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். ஒரு ஏ.டி.எம்.மில் தினமும் 300 கேன்கள் அதாவது 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விற்றால் தான் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையென்றால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கும். எனவே குடிநீர் ஏ.டி.எம். நடத்தும் மகளிர் சுய உதவி குழுவினர் திறமையாக செயல்பட்டால் அதிக லாபம் கிடைக்கும். மேலும் ஏ.டி.எம். அமைக்கும் இடத்தில் நிலத்தடி நீர் இருந்தால் தான் இதை அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com