

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.32.95 லட்சம் மதிப்பில் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம் முதல் வள்ளுவர் நகர் வரை முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47.46 லட்சம் செலவில் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட லேம்ஸ்ராக் பகுதியில் முடிக்கப்பட்ட சாலை பணி, பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பந்துமை பாலம் முதல் சின்ன வண்டிசோலை வரை அமைக்கப்பட்டு வரும் சாலை, பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பாரஸ்டேல் பகுதியில் ஒரு வீட்டுக்கு தலா ரூ.1.80 லட்சம் வீதம் தலா 2 வீட்டுக்கு ரூ.3.60 லட்சம் செலவில் வீடுகள் கட்டும் பணி ஆகியவைகளை அவர் ஆய்வு செய்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் நீர் குழி அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கேத்தி பாலாடா முதல் கொல்லிமலை ஓரநள்ளி வழியாக காந்திப்பேட்டை சந்திப்பு சாலையில் விரிவாக்க பணிகள் உடனடியாக நடைபெற அதிகாரிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
ஆய்வின் போது குன்னூர் தாசில்தார் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.