கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியின் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது நாராயணசாமி குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியின் நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியின் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவின் தாக்கம் உச்சநிலையில் இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு புதுச்சேரியில் இருந்த நேரத்தில் 2 மாதங்கள் முழு ஊரடங்கை கொண்டு வந்து கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலையில் உள்ளது. கொரோனா பரவல் குறித்து அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனாவின் 2-வது அலை அதிக வீரியம் கொண்டதாக இருக்கிறது. எனவே அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நடமாட்டம் சகஜமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு ரூ.500, ரூ1,000 என்று அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. மக்களுக்கு விழிப்புணர்வும், கொரோனாவின் விளைவையும் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். தடுப்பூசி போடுவது குறைந்து வருகிறது. தடுப்பூசியால் மட்டும்தான் கொரோனாவை விரட்டி அடிக்க முடியும்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் திரும்ப வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். கவர்னர் பல்வேறு துறை அதிகாரிகள், அமைப்பினர், ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் கொரோனா தொற்று புதுச்சேரி மாநிலத்தை முழுமையாக சுடுகாடாக்கிவிடும்.

பல்வேறு மாநிலங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்க விறகுகள் இல்லாத நிலை உள்ளது. கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வருகின்றன. மயானங்களில் உடல்களை எரிக்க காத்து கிடக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது. அவர் திறமை இல்லாதவர் என்பதை மக்கள் மத்தியில் நிரூபித்து காட்டி வருகிறார். நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்கவில்லை. கொரோனா தோல்விக்கு ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை முழு பொறுப்பேற்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இது நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வாக இருக்கிறது. இப்போதாவது புதுச்சேரி நிர்வாகம், சுகாதாரத்துறை விழித்தெழுந்து மக்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com