கொரோனா தடுப்பு பணியில் உள்ள தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பு - கலெக்டர் அலுவலகத்தில் புகார்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து வருவதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் உள்ள தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பு - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை ஆஸ்பத்திரியாக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 250 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். நேற்று 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நேரில் வந்து இந்த மனுவை கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருந்ததாவது.

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரியாக இருந்தபோது பலர் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். பின்னர் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டதும் ஒப்பந்ததாரர் மூலம் மேலும் பலர் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர். அப்போது நாள் ஒன்றுக்கு ரூ.490 ஊதியம் என்ற அடிப்படையில் பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு தொடங்கியபோது தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை முழுமையாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வைக்க அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது பேசிய மாவட்ட கலெக்டர், அனைத்து தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கும் ரூ.490 ஊதியம், இரட்டிப்பு சம்பளமாக வழங்கப்படும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் உற்சாகமாக வேலை செய்து வந்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதிக்கு பின்னர் இதுவரை தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

கடந்த 10-ந் தேதி பணியாளர்கள் இதுபற்றி ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளரிடம் கேட்டபோது, யாருக்கும் ரூ.490 ஊதியம் வழங்க முடியாது. ரூ.390 மட்டுமே வழங்க முடியும் என்றார். பணியாளர்கள் ரூ.490 வீதம், நிலுவைத்தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். 2 நாட்களில் பதில் அளிப்பதாக மேலாளர் கூறினார். தொடர்ந்து 12-ந் தேதி மீண்டும் அவரை சந்தித்தபோது, நாள் ஒன்றுக்கு ரூ.290 மட்டுமே ஊதியம் தர முடியும் என்று கூறினார். இவ்வாறு தொடர்ந்து எங்களுக்கு ஊதியம் தராமல் ஒப்பந்த நிறுவனத்தினர் ஏமாற்றி வருகிறார்கள். எனவே எங்களுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.490 மற்றும் இரட்டிப்பு ஊதியம் வழங்குவதுடன் அனைவருக்கும் உறுதி அளித்ததுபோல பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்தில் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய ஓய்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக திருப்பூர் தொகுதி எம்.பி.யான கே.சுப்பராயனிடமும் ஒப்பந்த பணியாளர்கள் மனு கொடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com